நற்றிணை 371

காயாங் குன்றத்துக் கொன்றை போல,
மா மலை விடர் அகம் விளங்க மின்னி,
மாயோள் இருந்த தேஎம் நோக்கி,
வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்,
பெயல் தொடங்கினவே, பெய்யா வானம்:      5
நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி,
அழல் தொடங்கினளே ஆயிழை; அதன் எதிர்,
குழல் தொடங்கினரே கோவலர்
தழங்கு குரல் உருமின் கங்குலானே

பொருள்:-
காயாம் பூக்களிடையே கொன்றை பூத்திருப்பது போல மின்னும் மேகங்கள் என் மனைவி மாயோள் இருக்கும் திசை நோக்கிச் சென்று, வானம் இருண்டு, மழை பொழியத் தொடங்கிவிட்டது. இதுவரை, பெய்யாமல் இருந்த வானம் இப்போது பெய்யத் தொடங்கிவிட்டது. ஒளி வீசும் அவளது கைவளையல்கள் நழுவுவதால் அவள் அழத் தொடங்கியிருப்பாள். அவளை மேலும் வருத்தும் வகையில் முழங்கும் இடி போல, இரவு வேளையிலும் கோவலர் ஊதும் குழலோசை கேட்டுக்கொண்டிருக்கும்.
பாக, தேரை விரைந்து ஓட்டு.
மழைக்காலத்தில் திரும்பிவிடுவேன் என்று சொன்னேன் அல்லவா?
தலைவன் பாகனிடம் இவ்வாறு கூறுகிறான்.

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்

திருமாலும் திருமகளும்