நற்றிணை289

அம்ம வாழி, தோழி! காதலர்,
நிலம் புடைபெயர்வதாயினும், கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே; வானம்
நளி கடல் முகந்து, செறிதக இருளி,
கனை பெயல் பொழிந்து, கடுங் குரல் பயிற்றி,            5
கார் செய்து, என் உழையதுவே; ஆயிடை,
கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய
பெரு மர ஒடியல் போல,
அருள் இலேன் அம்ம; அளியேன் யானே.

பொருள்:-

அவர் பொய் சொல்லமாட்டார். அவர் வருவதற்கு முன் வானம் பொழிகிறது. இவ்வாறு சொல்லித் தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறார்.
அம்ம, தோழியே, கேள். உலகமே புரண்டு மாறினாலும் உன் காதலர் பொய் சொல்லமாட்டார். திரும்பிவிடுவேன் என்று சொல்லிச் சென்ற கார்காலத்தில் திரும்பிவிடுவார். வானம் கார்பருவம் வருவதற்கு முன்பாகவே கடலில் தண்ணீரை மொண்டுகொண்டு வந்து, கம் என்று இருட்டி, பெருமழை பொழிந்து, இடி முழக்கத்துடன் கார்காலத்தை நம்மிடம் பொய்யாகக் காட்டிக்கொண்டிருக்கிறது. கோவலர் ஆட்டுக்குட்டிகளுக்குத் தீனியாக மரத்தில் தழைகளை வெட்டிக் கோலில் மாட்டித் தோளில் சுமந்துகொண்டு இரவில் வருவர். அந்தத் தழை போல நான்தான் இரங்கத்தக்க நிலையில் இருக்கிறேன்.
அவரும் வரவில்லை; உன்னையும் சமாளிக்க வேண்டிய நிலையுள்ளது. திண்டாடுகிறேன்.
தோழி சொல்கிறாள்.

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்