நற்றினை 161


 இறையும் அருந் தொழில் முடித்தென பொறைய
கண் போல் நீலம் சுனைதொறும் மலர
வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின்
இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய
நெடுந் தெரு அன்ன நேர் கொள் நெடு வழி
இளையர் ஏகுவனர் பரிப்ப வளை எனக்
காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப
தோள் வலி யாப்ப ஈண்டு நம் வரவினைப்
புள் அறிவுறீஇயின கொல்லோ தெள்ளிதின்
காதல் கெழுமிய நலத்தள் ஏதில்
புதல்வற் காட்டிப் பொய்க்கும்
திதலை அல்குல் தேம் மொழியாட்கே

பொருள்:-
அரசன் தன் போர்த்தொழிலை முடித்துக்கொண்டான். பாறைகளில் உள்ள நீர்ச்சுனையில் நீல மலர்கள் மலர்ந்துள்ளன. காடெங்கும் வேங்கை மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. தேன் உண்ணும் பறவை இனம் இம் என்னும் ஒலியுடன் பூக்களில் பொதிந்து கிடக்கின்றன. போரிட்ட இளைஞர் நெடுந்தெரு போன்ற நேர்வழியைப் பின்பற்றிக் குதிரை மேல்  செல்கின்றனர். குதிரைக் குளம்புகள் வளைந்த இதழ்களை உடைய காந்தள் பூக்களின் கொடிகளை அறுத்துத் தள்ளுகின்றன.
இங்கே இந்த நிலைமை.
அங்கே இல்லத்தில் என் தேன்மொழியாள் இருக்கிறாள். என் புதல்வன், அவள் தோளைக் கட்டிப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பான். (அப்பா எங்கே எனக் கேட்பான்) அவள் பறவைகளை காட்டி அவனை ஏமாற்றிக்கொண்டு இருப்பாளோ? அவள் தெளிவான காம உணர்வை வெளிப்படுத்தும் நல்லழகு மிக்கவள். மடிப்பு விழுந்த அல்குல் (இடுப்பு) கொண்டவள்.  தலைவன் தன் தேர்ப்பாகனிடம் இப்படிச் சொல்லித் தேரை விரைந்து செலுத்துமாறு அறிவுறுத்துகிறான்

Comments