அகநானூறு 154


படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்
நெடு நீர் அவல பகுவாய்த் தேரை
சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க,
2
குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி
செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப,  5
3
வெஞ் சின அரவின் பை அணந்தன்ன
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ,
3
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதிய,
4
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி;     10
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு
நம் வயிற் புரிந்த கொள்கை
அம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே. 15

பொருள்:-

போர் முடிந்தத்து. நீ உன்னவளைத் தழுவவேண்டும். நான் என்னவளைத் தழுவவேண்டும். தேரை ஓட்டிக என்று தலைவன் தன் தேரோட்டியிடம் கூறுகிறான்.
1
மழை பொழிந்து முல்லை நில்லத்துப் பள்ளங்களில் தேங்கி நிற்கும் நீரில் பிளந்த வாயை உடைய தவளை பல இசைக்கருவிகள் முழங்குவது போலக் கத்துகின்றன.
2
சிறிய புதர்களில் பிடவம் பூக்கள் நீண்ட காம்புகளுடன் பூத்து செந்நிலப் பரப்பில் வெண்மணல் போலக் கொட்டிக் கடக்கின்றன.
3
நாகப் பாம்பின் நச்சுப்பை விரிந்திருப்பது போல கோடல் மலர்கள் இதழ்களை விரிக்கின்றன.
3
திருகிய கொம்புகளை உடைய இரலை மான் தெளிந்த நீரைப் பருகி தான் விரும்பும் பெண் துணையோடு நிம்மதியாக வாழ்கிறது.
4
வலவ! இப்படிக் காடெல்லாம் கவின் பெற்றுக் குளுமையுடன் திகழும் வழியில் தேரை ஓட்டுக. ஓடும் குதிரை மெலிந்து இளைப்பு வாங்காமல் இருக்கும்படி ஓட்டுக. பிடரிமயிர் கொய்யப்பட்டிருக்கும் குதிரை காலடி மணியோசை மெதுவாகக் கேட்கும்படி ஓட்டுக. நம்மிடம் ஆசைகொண்டு காத்திருக்கும் நம் அம்மா அரிவையை (அழகிய மாமைநிறம் கொண்ட பருவப் பெண்ணை), விரைந்து தழுவ வேண்டும்.

Comments

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்