இடைக்காடர்

இடைகாடர்  பாடல் 

எல்லா வுலகமு மெல்லா வுயிர்களும்
எல்லாப் பொருள்களு மெண்ணரிய
வல்லாள னாதி பரம சிவனது
சொல்லா லாகுமே *கோனாரே*.


வானியல் போல வயங்கும் பிரமமே
சூனிய மென்றறிந் தேத்தாக்கால்
ஊனிய லாவிக் கொருகதி யில்லையென்
றோர்ந்துகொள் ளுவீர்நீர் *கோனாரே*


முத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது
முத்திக் குறுதிகள் செய்யாக்கால்
சித்தியும் பத்தியுஞ் சத்தியு முத்தியுஞ்
சேரா வாகுமே *கோனாரே*.


தொல்லைப் பிறவியின் தொந்தமுற் றறவே
சோம்பலற் றுத்தவஞ் செய்யாக்கால்
எல்லையில் கடவு ளெய்தும் பதமுமக்கு
இல்லையென் றெண்ணுவீர் *கோனாரே


ஆரண மூலத்தை அன்புடனே பர
மானந்தக் கோலத்தைப் பன்புடனே
பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞானப்
போதத்தைச் சார்ந்திடு *கோனாரே*.


காலா காலங் கடந்திடு சோதியைக்
கற்பனை கடந்த அற்புதத்தை
நூலாற் பெரியவர் சொன்னநுண் பொருளை
நோக்கத்திற் காண்பது *கோனாரே*.


சொல்லருஞ் சகல நிட்கள மானதைச்
சொல்லினாற் சொல்லாமல் கோனாரே
அல்லும் பகலு மகத்தி லிருந்திடிற்
அந்தகன் கிட்டுமோ *கோனாரே*


சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடுந்
தோற்றம்போல் வெவ்வினை தூள்படவே
நாரியிடப்பாகன் தான்நெஞ்சிற்போற்றியே
நற்கதி சேர்ந்திடும் கோனாரே.


மும்மலம் நீக்கிட முப்பொறிக் கிட்டாத
முப்பாழ் கிடந்ததா மப்பாழைச்
செம்மறி யோட்டிய வேலை யமைத்துஞ்
சிந்தையில் வைப்பீரே கோனாரே


பஞ்ச விதமாய்ச் சஞ்சலம் பறக்கப்
பற்ற நின்றதைப் பற்றி யன்பாய்
நெஞ்சத் திருத்தி யிரவு பகலுமே

நேசித்துக் கொள்ளுவீர் கோனாரே
  

Comments