தமிழ் தந்த ஆய்



தமிழ் தந்த ஆய் குடி வரலாறு சில சங்க இலக்கியங்களில் இருந்து

முல்லை நிலம் என்பது காடும் காடு சேர்ந்த இடமும் முல்லை நிலத்திற்கான காலம் கார் காலம் சிறுபொழுது மாலை முல்லை நிலத்துக்குரிய கடவுள் திருமால் முல்லை நிலத்தில் கார் காலம் துவங்குகிறது இதுவே இப்பாடலின் துவக்கமாக அமைந்துள்ளது.

"நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல,
பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி,
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை" (1-6)

இங்கு முல்லை நில கடவுள் திருமாலின் தோற்றத்தையும் கார்கால மழைப் பொழிவையும் அழகாக காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

இந்த உலகம் முழுவதும் நிறைந்து, வலப்புறமாக சுழி கொண்ட வலம்புரிச் சங்கையும் சக்கரத்தையும் கையில் கொண்டு மகாபலி சக்கரவர்த்தி இட்ட நீரைப் பெற்றதும் விஸ்வரூபமெடுத்து நின்ற திருமாலைப் போல் முகிலானது ஒலி முழங்குகின்ற குளிர்ந்த கடலிலிருந்து நீரைப்பெற்று வலப்புறமாகச் சுழன்று மலைகளை இடமாகக் கொண்டு எழுந்து மிகுந்த மழையைப் பொழிந்த சிறிய புல்லிய மாலை நேரம், பிரிவுத் துயரத்தைத் தரும் மாலை நேரம்...

என்று மிகச் சிறப்பான கார்காலக் காட்சிப்படுத்தலோடுத் துவங்குகிறது இப்பாடல் இதில் திருமால் வலம்புரிச் சங்கும் சக்கரமும் ஏந்தியவனாகவும், மகாபலியிடம் மூன்றடி மண்கேட்ட வாமணாவதார புராணக்கதையும் காட்டப்பட்டுள்ளதால் இப்பாடல் தமிழர்களிடம் சமய கருத்துகள் தோன்றியப் பிறகு எழுதப்பட்டது என்பதை அறியமுடிகிறது.
மழைப்பெய்யும் அறிவியலும் சிறப்பாகக் காட்டப்பட்டிருப்பது அறியத்தக்கது.

மேலும் இப்பாடலில் முல்லைத் திணைக்குரிய கருப்பொருள்களான மக்கள் மிலேச்சர், யவனர், பணிபுரியும் பெண்கள் நாழிகைக் கணக்கர், காவலர் பறவை மயில், விலங்குகள் மான், யானை, பசு ஆகியன, காயா கொன்றை காந்தள் கோடல் முல்லை போன்றப் பூக்கள், வரகு உணவு ஆகியன மிக அருமையாக அமையுமாறு பாடப்பட்டுள்ளது.

முல்லை நிலத்திற்கான புறத்திணை வஞ்சித் திணை வஞ்சித் திணை என்பது மன்னன் போருக்குச் செல்லுதலை கூறுவது. இப்பாடலிலும் வஞ்சித் திணையின் பாசறை நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன.

இனிப் இப்பாட்டின் சில வரிகளை பார்ப்போம்..

"அருங்கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு
நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது,
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப" (7-11)

அரிய காவலையுடைய பழைய ஊர். அங்கு யாழிசைப்போல் வண்டுகள் ரீங்காரமிடுகின்றன என மிகுந்த இரசனையோடு துவங்கும் இவ்வரிகளில் இரண்டு பழக்கங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

பெண்கள் நாழியில் நெல்லை கொண்டுச் சென்று நறுமணமிக்க முல்லைமலர்த் தூவி கையால் தொழுதல், மற்றும் விரிச்சி கேட்டல்.

இறைவனை கைக்குவித்து தொழுதல் அன்றும் வழக்கமாக இருந்திருக்கிறது. விரிச்சி என்பது நன்மொழி. முதுமக்கள், நல்லோரின் வாய்மொழி நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையும் காட்டப்பட்டுள்ளது.

"சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோல் கோவலர் பின் நின்று உய்த்தர இன்னே வருகுவர் தாயர்” என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம், அதனால் நல்ல நல்லோர் வாய்ப்புள்"

முல்லை நிலத்தின் மக்கள் ஆயர். இவ்வாயர் பெண்கள் மிகுந்த போற்றுதலுக்குரியவராய் காட்டப்படுகிறார்கள் எனவே ஆயர் பெண் கன்றிடம் சொன்ன வார்த்தையையே விரிச்சியாக கொண்டு

நன்னர் நன்மொழி கேட்டனம், அதனால்,
நல்ல நல்லோர் வாய்ப்புள்
தலைவியைத் தேற்றுகின்றனர்.

சின்ன கயிற்றில் கட்டப்பட்ட கன்றானது கத்துகிறது. அதைக்கேட்ட ஆயர் பெண்ணானவள், நடுங்குகின்ற குளிரால் தன் கையால் தோளை அணைத்தவாறு இருப்பவள் அக்கன்றின் தோளைச் சுற்றி கையால் அணைத்து கோவலர் தம் கொடுங்கோலால் தட்டியவாறே அழைத்துவர உன் தாயான பசு உடனே வந்துவிடும் என்று கூறுகிறாள் இதைக் கேட்ட தலைவியின் சுற்றம் அதை நல் நிமித்தமாகக் கொண்டு தலைவன் உடனே வருவான் என தேற்றுகின்றனர்.

இங்கு கன்றை கயிற்றால் கட்டி வைக்கும் பழக்கமும், கோவலர் மாடு மேய்க்க கொடுங்கோல் பயன் படுத்தியமையையும் கூட அறியமுடிகிறது. மனிதரிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் அவர் அன்பு பூண்டு இருந்ததை இதன்மூலம் நாம் காணும் போது தமிழரின் பண்பாட்டுச் சிறப்பை உணரமுடிகிறது.
இவ்வளவுச் சொல்லியும் தலைவி ஆறுதல் அடையாது

…………………….கலுழ் சிறந்து
பூப்போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப

மிகவும் கலங்கி தன் பூப்போன்ற மையிட்ட கண்களிலிருந்து முத்துப் போன்ற கண்ணீரை உகுக்கிறாள்.

இவள் பாண்டிய நாட்டுத் தலைவியல்லவா அதனால் இவள் கண்ணீரையும் முத்தாக காட்டுகிறார் ஆசிரியர். அவரே பொன் வணிகனாரின் மகனல்லவா! அதனால் கூட கண்ணீரும் முத்தாகத் தெரிந்ததோ! புலவருக்கு. என்னே அழகு!

காட்டில் பிடவ கொடிகளைக் கொண்டு பாசறை அமைக்கிறார்கள் அங்கு அரசனுக்கு படைகளுக்கு மத்தியில் திரைகளால் பிரிக்கப்பட்ட தனிவீடு அமைத்தனர் அங்கு

"உரையா நாவின்
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக" (65)

வாய்பேசமுடியா மிலேச்சர் காவலிருந்தனர் என்பதை காண்கிறோம். இரகசியம் காத்தல் பொருட்டு வாய்ப் பேச முடியாதார் மன்னனின் பள்ளியறைக்கு காவலிருந்தனர் என்பதை அறியலாம்.

"குறுந்தொடி முன் கை கூந்தல் அம் சிறுபுறத்து,
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரிக் கச்சின் பூண்ட மங்கையர்,
நெய் உமிழ் சுரையர், நெடுந்திரிக் கொளீஇ,
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட"

என்ற வரிகளில் பெண்களும் போர்காளத்தில் இருந்தனர் என்பதும் அவர்கள் கச்சில் (இடுப்பில்) கூரிய ஒளிவீசும் வாளைக் கட்டியிருந்தனர் என்பதும், இவர்கள் பாவை விளக்குகளில் நெய் கொண்டத் திரியைக் கொளுத்தி அணையாமல் காத்தனர் என்பதும் பெறப்படுகிறது.
மேலும் பாசறையில்
         
பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள்,
பொழுதை அறிந்துச் தவறாது சொல்லும் நழிகைக் கணக்கர்,
வலி புணர் யாக்கை வன்கண் யவனர்
வல்லிமையான உடலைக் கொண்ட கொடூரமான கிரேக்கர் ஆகியோர் இருந்ததையும் அறிகிறோம்.

பாசறையில் மன்னனின் மனநிலை அழகாகக் காட்டப்பட்டுள்ளது.

முதல் நாள் மன்னன் தன் படைக்கு நேர்ந்த சேதத்தைப் எண்ணுகிறான்.
தனது யானைப்படைக்கும் குதிரைக்கும் வீர்ர்களுக்கும் ஏற்பட்ட துன்பத்தை காண்கிறான் என்றாலும்
மண்டு அமர் நசையொடு, கண்படை பெறாஅது என்று அரசன் போரை விரும்பியவனாக துயிலாமல் இருந்தான் எனறே காட்டுகிறார் அடுத்து

"முரசு முழங்கு பாசறை
இன் துயில் வதியுநன்"

பகயை வென்று வாகைச்சூடியதால் முழங்குகின்ற முரசைனைக் கொண்ட பாசறையில் மன்னன் இனிதாக துயின்றான் என்றும் காட்டுகிறார், வெற்றிக்கு முன்னும் பின்னதுமான மன்னனின் மனநிலை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது
முல்லைப்பாட்டின் வழி
அரசனுக்கு நால்வகை படைகளும் இருந்ததை அறிகிறோம்.

"எடுத்துஎறி எஃகம் பாய்தலின், புண்கூர்ந்து,
பிடிக்கணம் மறந்த வேழம்
என்பதால் யானைப் படையும்"

"தேம்பாய் கண்ணி நல்வலம் திருத்தி,
சோறுவாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்" (71 - 72)
என்பதால் காலாட்படையும்,

"தோல்துமிபு, பைந்துனைப் பகழி மூழ்கலின்,
செவி சாய்த்து உண்ணாது உயங்கும் மா"
என்று உணர்த்துவதால் குதிரைப் படையும்,

‘வினை விளங்கு நெடுந்தேர்’ (103)
என்பதால் தேர்ப்படையும் இருந்ததாக முல்லைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆசிரியரின் பாசறைப்பற்றியச் துல்லியமானச் செய்திகள் மற்றும் போர் பற்றியச் செய்திகளிலிருந்து இவர் மன்னர்களுடன் போரில் இருந்தார் என்றும், இவரே ஒரு படைவீர்ர் என்றும் ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர்..

வீட்டில் தலைவியும், பாசறையில் அரசனும் பிரிவை ஆற்றியிருக்கிறார்கள். தான் நினைத்த வெற்றியை அடந்த மன்னன் அடர்ந்த முல்லை  நிலகாட்டு வழியாகத் திரும்புகிறான். அங்கு நுண் மணலில் நெருங்கின இலையையுடைய காயா மலர்கள் கண்மைப் போல மலர்ந்துள்ளன, தளிரையும் கொத்துக்களையுமுடைய சரக்கொன்றை மரங்கள் நல்ல பொன்னைப் போன்ற மலர்களைக் கொட்டியிருக்கின்றன, வெண்காந்தளின் குவிந்த மொட்டுக்கள் அழகிய கைகளைப் போல் அவிழ்ந்துள்ளன, இதழ்கள் நிறைந்த செங்காந்தள் குருதி போல மலர்ந்துள்ளன. இவ்வாறு காடு செழித்த சிவந்த முல்லை நிலத்தின் பெருவழியில் மழைப்பொழிந்து கார்கால துவக்கத்தை காட்டுகிறது. அங்கு கொம்புகளைக்கொண்ட ஆண்மானுடன் பெண்மானும் துள்ளி ஆடுகிறது. இக்காட்சியெல்லாம் தலைவனுக்குத் தலைவியின் நினைவை ஊட்டுகின்றன. எனவே

"முதிர் காய் வள்ளியம் காடு பிறக்கொழிய,
துனை பரி துரக்கும் செலவினர்,
வினை விளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே"
.
முதிர்ந்த காயையுடைய வள்ளியங்காடு பின்னால் மறையும் படியாக, விரைந்து செல்லும் குதிரையைத் தேரோட்டி மேலும் தூண்டிச் செலுத்த,  உயர்ந்த தேரில் பூட்டிய போர்த் தொழிலில் சிறந்த குதிரைகள் வந்தன

என்று மிகச் சிறந்த முல்லை நிலக் காட்சியோடு முடிகிறது முல்லைப் பாட்டு.

Comments

Post a Comment

Popular posts from this blog

முல்லை நில மக்கள்

புறநானூற்றில் ஆயர்கள்